Monday, November 23, 2015

இலக்குவனார் இலக்கியப் பேரவை, அம்பத்தூர் 100- வது திங்கள் விழா !


                                                 


குறள்  நெறி  ஓங்கின்  குடியரசு  ஓங்கும்  

  முனைவர் சி. இலக்குவனார்.    

அவர்தம் பெயரில்  05 -08 - 2006 ஆம்  நாளன்று  சென்னைப்  புறநகர் அம்பத்தூரில்  பெரியவர்  தோழர்  நல்லகண்ணு அவர்களால்  இலக்கியப் பேரவை  தொடங்கி வைக்கப்பட்டது.  இப்பேரவை  தனது  தொடர்  பணியால் எட்டு  ஆண்டுகளை நிறைவு  செய்து  ஒன்பதாம்  ஆண்டில்  பீடுநடை போடுகின்றது. அவ்வகையில்  எட்டாம்  ஆண்டில்  நடைப்படுத்திய செயல்பாடுகளை  ஆவணப்படுத்திடும் வகையில்   “எஃகு  நடைப்  பேரவையின் எட்டாம்  ஆண்டு” என்றொரு  நூலை  வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல்  ஞாயிறன்று காலை 9.30 மணிக்குக் கூட்டம்  தொடங்குகின்றது. 2014 - ஆம் ஆண்டு  இப்பேரவைக்கு  ஏழாம்  ஆண்டு நிறைவடைகின்றது. 06-04-2014-இல்  துவங்கி , 05-04-2015  வரை 13 கூட்டங்கள் நிகழ்த்தியுள்ளது. வெறும்  கூட்டமாக  இல்லாமல் ஆய்வுக்களமாகவே  அது திகழ்ந்துள்ளது  என்பது பெருமைக்குரிய தகவலாகும்.

பாவேந்தரின் பைந்தமிழிசை,  தொல்காப்பியம்,  வாழ்வின்  சட்டவியல், சிலம்பில்  தண்டமும்  வழக்கும்,  தமிழ்  இலக்கியங்களில்  தாய்மை, செந்தமிழ்  அந்தணர் திரு.வி.க., சிதம்பநாதரின்  செய்ந்நன்றி  அறிதலும் செந்தமிழ்  வேட்கையும், வள்ளலார்  கண்ட ஒருமைப்பாடு, நீதிபதி வேதநாயகர், புதுநெறி காட்டிய  புலவன் (பாரதியார் ,  சமணமும் திருவள்ளுவரும்,  உலக  முதன் மொழி -தமிழே, வள்ளல்  பாண்டித்துரையின் வாழ்வும் பணியும், திருநல்கும்  தமிழ்  இவையே அந்த 13  கூட்டங்களில் சொற்பெருக்காற்றப்பட்ட உரைகளின் ஆய்படு பொருளாக அமைந்தன.  தமிழ்ச் சமுதாயமும், தமிழினமும் மறக்கக்கூடாத பண்பாட்டையும் மெய்யான தமிழ்ப்  பற்றாளர்களையும் நினைவுகூறும்  வண்ணம்  தலைப்புகள் தெரிந்தெடுத்திருக்கும்  செயல்திறனே இலக்குவனார்  பேரவையின் பெருமையைப்  பறைசாற்றும்

ஒவ்வொரு  கூட்டத்திலும் திங்கள் ஓர் திருக்குறள்  என்ற  தலைப்பில் பேரவைச்  செயலர்  புலவர் உ.தேவராசு தொடர் சொற்பொழிவாற்றிவருவதும் குறிப்பிடத்தக்கது.

நற்றமிழ் அறிவோம்  என்னும்  தலைப்பில்  நான்கு  பக்கங்களில்  பல்வேறு துறைகளுக்குமான தமிழ்ச்  சொற்கள் 114 -ஐ  அறிமுகப்படுத்துகின்றது. இரு சொற்கள் ஒரு  பொருளைத்தரும் 16 தொல்காப்பியச்  சொற்களும் குறிப்பிடப்படுள்ளன. சிலம்பு  கொலைக்கலைக்களக் காதையில் வருகின்ற 12 அரிய சொற்களும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மறைமலையடிகள் வழங்கிய வடமொழிக்கு மாற்றான 12 தமிழ்ச்சொற்களையும் இனம் காட்டுகின்றன. அழகான  நல்ல  தமிழ்ப் பெயர்கள்  மழலைகளுக்குச்  சூட்டி மகிழ 11 பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பாரதி பயன்படுத்திய  வடசொற்களுக்கு இணையான  தமிழ்ச்சொற்கள் 12-ம் காணப்படுகின்றன. Establishment charges - சிற்றாள் செலவு  என்ற தமிழ்ச் சொல் காணப்படுகின்றது. இந்த ஆங்கிலச்சொல்  அலுவலகங்கள்/ தொழிற்சாலைகள்/ பள்ளிகள்/ கல்லூரிகள் ஆகிய அனைத்துத்  துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. நிர்வாகம் / மேலாண்மைச் செலவுகளையே குறிக்கும் என்பது தெளிவு. எனவே, வருங்காலத்தில் இதுபோன்ற  குழப்பங்கள் ஏற்படுவதைத்  தடுத்தல் நல்லது. 

நூல் அறிமுகம்,  இலக்குவனார்  யார்  என்ற  கவிதை, தொல்காப்பியமும் திருவள்ளுவமும் இரு கண்கள், கபிலர் குறிஞ்சிப்பாட்டில் பாடியுள்ள  99 வகையான  மலர்களின்  பெயர்கள், பெருங்களிற்றின் பீடுநடை என்ற பாடல், மூளியாக்கி வைத்தோம் என்ற உணர்ச்சிததும்பும் தமிழ்ப்பாடல், நீதியரசருக்குச்  சில  திருக்குறள்பாக்களின்  மூலம்  அறிவுரைகள், இடம்பெற்றுள்ளன. , தமிழின் இனிமை,   பாரதியின் பெருமை  , பாண்டித்துரைத்  தேவரைப்பற்றிய  சிறப்பு, மங்கையர்  எழுச்சியைப்பற்றிப் பாவேந்தர்  பாரதிதாசன்  எழுதியுள்ள பாடல்கள், கவிஞர் ஈழவேந்தனின் திருகுறள் புகழ்ச்சிப்பாடல்,   தமிழரிசிக் குறவஞ்சியின்  பாடல், வேணு. குணசேகரின்  பாடல்கள், வ.உ.சி.யின் பாடல் திரட்டிலிருந்து ஓர்  பாடல் என்றவாறு 12 பாடல்கள் மற்றும் கவிதைகள் இச்சிறுநூலுக்கு அணி சேர்க்கின்றன.


Displaying img844.jpg


தொல்காப்பியர் விருது பா.வளனரசுவிற்கும், குருபழநி அடிகளாருக்கு திருவள்ளுவர் விருதும், வண்ணப்பூங்கா வாசனுக்கு இலக்குவனார்  விருதும் வழங்கிக் கெளரவித்துள்ளது, விருதாளர்களது விபரங்களுடன்  கூடிய படங்களும் நூலில் இடம் பெற்றுள்ளன.  மேலும் ,2010 முதல் 2014 வரை விருதினைப் பெற்றோர் படங்கள் உட்புற அட்டைகளை  அலங்கரிக்கின்றன..

விருதாளர்  சார்பில்  நெல்லைவாழ் இலக்கியப் பெருமகன்  , உலக அறிஞர்கள் பார்வையில்  திருக்குறள்  என்னும்  தலைப்பில் பேருரை  ஆற்றினார்.   

அம்பத்தூர் இலக்குவனார் பேரவை. விருதுகளைப், பேரவையின் சார்பாக சுப.வீரபாண்டியன் வழங்கித் தமிழகமே நீ  எப்போதுதான் விழிப்பாய் என்னுந் தலைப்பில் சிறப்புரை  ஆற்றினார்.. நூலை க.வரதன் வெளியிட ப.இரகுமான் பெற்றுக் கொண்டுள்ளார்.  பேரவைப் பாடகர்குழு தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடியது. விழா அறிமுக உரையை செம்பை சேவியரும், வரவேற்புரையை உ.தேவதாசும்  நிகழ்த்தினர். வாழ்த்துரை தரும.அசோகன் வழங்கினார்.,   ஏடும் நாடும் என்னும் பொருளில்  பா.இரகுமான் உரையாற்றினார்.. ஆ.வே.நடராசன் நன்றியுரை நிகழ்த்திட விழா இனிது நிறைந்தது. 










இலக்குவனார் பேரவையின் செயலர் புலவர் உ.தேவராசு , 94444 88507

ஒருங்கிணைப்பாளர்  செம்பை செவியர்  94440 25315 , 99403 21854 




No comments:

Post a Comment